Skip to content

தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொலிவுறு நகரத் திட்ட விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது. இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இப்பிரிவில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய கட்டுமானம், சுற்றுலாவை மேம்படுத்தியதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்ததற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை (ஆக.25) அறிவிக்கப்பட்டது.
இதற்கான விருது மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் நகரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குளத்துக்கு பெரியகோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் பராமரிப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது. இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!