தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3-பள்ளி மாணவிகளில் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே சருக்கை எடத்தெருவில் வசிப்பவர் அறிவழகன். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அறிவழகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் கனிஷ்மா (14), கேசவர்த்தினி (12). இவர்கள் இருவரும் பாட்டி வீடான சருக்கை எடத்தெருவில் வசித்து வந்தனர்.
இதில் கனிஷ்மா பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை கேசவர்த்தினி கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சருக்கை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக அறிவழகன் மகள்கள் கனிஷ்மா, கேசவர்த்தினி ஆகியோர் சென்றனர். இவர்களுடன் மேலும் அதே தெருவில் வசிக்கும் விவசாயக் தொழிலாளி மதியழகன் என்பவரின் மகள் உமையாள்புரம் மெட்ரிக் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த சகானா (9) என்பவரும் சென்றுள்ளார்.
இவர்கள் மூன்று பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதனால் மூன்று பேரும் அலறியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு கரையில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர். இதில் சிலர் ஆற்றில் குதித்து கேசவர்த்தினி மற்றும் சகானா ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர்.
ஆனால் தண்ணீரின் வேகத்தில் கனிஷ்மா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கனிஷ்மாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கனிஷ்மா கிடைக்கவில்லை. இதனால் அவரது நிலை என்ன ஆனது என்பது குறித்து தெரியாத நிலையே நீடித்து வந்தது.
இந்நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற போது, அடித்து செல்லப்பட்ட கனிஷ்மாவின் உடலை இன்று பொதுமக்கள் உதவியுடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கபிஸ்தலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றில் குளிக்காதீர்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எத்தனை எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.