தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் 11ம் தேதி ஒரத்தநாட்டில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அரசு திறனாய்வு போட்டி தேர்விற்கு தேர்வு எழுத வந்தார். தேர்வு முடிந்து மீண்டும் மதியம் வீட்டிற்கு செல்வதற்காக பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாட்டிற்கு அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் சென்று கொண்டு இருக்கும் போது நடத்துனர் பாபநாசம் தாலுகா நரியனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47) அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த மாணவி வீட்டிற்கு வந்தவுடன் தனது பெற்றோரிடம் பஸ்சில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர்.
இதன்பேரில் போலீசார் அரசு பஸ் நடத்துனர் சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவிக்கு நடத்துனர் சுதாகர் பாலியல் தொல்லை அளித்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் நடத்துனர் சுதாகரை கைது செய்தனர்.