தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு பேருந்தை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் மது போதையில் வழிமறித்து டிரைவரை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (44). இவர் அரசு விரைவு பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக செல்வதற்காக பேருந்தை ஓட்டி வந்தார். தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதிக்கு வந்தபோது 2 மர்மநபர்கள் பேருந்தை வழிமறித்தனர்.
இதனால் பேருந்தை வேல்முருகன் நிறுத்தி உள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் ரெண்டு பேரும் பேருந்தை ஏன் வேகமாக இயக்கி வந்தாய் என கேட்டு வேல்முருகனிடம் தகராறு ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் மதுபானில் இருப்பதை வேல்முருகன் உணர்ந்தார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் இருவரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வேல்முருகன் தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த சி ஐ டி யு பனிமனை தலைவர் பரத்வாஜ் தலைமையில் தொழிற்சங்கத்தினர் டிரைவர் வேல்முருகனை தாக்கியவர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கிழக்கு போலீசார் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து தஞ்சாவூர் மோத்திரப்ப சாவடி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் அருள் தாஸ் (27), அவரது தம்பி பாலமுருகன் (19) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.