தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணம்பேட்டை குடியனாதெருவை சேர்ந்தவர் சாமியப்பா மகன் சசிகுமார் (வயது 24). லாரி டிரைவர். தஞ்சை வடக்கு மானோஜிப்பட்டி சிவநாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மரியஜெயராஜ் (50). இவரும் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சசிகுமாரிடம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரிடம் கடந்த 2022-ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.4 லட்சம் மற்றும் பாஸ்போர்ட்டை மரியஜெயராஜ் வாங்கினார். ஆனால் கூறியப்படி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கவில்லை.
இதனால் தான் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு மரியஜெயராஜிடம், சசிகுமார் கேட்டார். இதில் ரூ.1 லட்சம் மட்டும் மரியஜெயராஜ் திருப்பி கொடுத்தார். மீதி பணம், பாஸ்போர்ட்டை கேட்டபோது தராமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் மீதம் உள்ள ரூ.3 லட்சத்துக்கு காசோலையை சசிகுமாரிடம் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் போட்டபோது பணம் இல்லாமல் திருப்பி வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சசிக்குமார் மீதம் உள்ள பணம் மற்றும் பாஸ்போர்ட்டை உடனே கொடுக்கும் படி மரியஜெயராஜிடம் கேட்டார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை.
இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் நிலையத்தில் சசிகுமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்குப்பதிவு செய்து மரியஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
