விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், ‘கலைஞரின் கனவு இல்லம்’ பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, திருச்சிற்றம்பலம் முத்துமாரியம்மன் விழா அரங்கில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து 270 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
தேடிச் சென்று வழங்கல் இந்த விழாவில், புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான வின்சென்ட் ஜெயராஜ் என்பவர் பெயர் வாசிக்கப்பட்ட போது, அவரால் மேடை ஏற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் அலுவலர்களிடம் பயனாளி வரவில்லையா எனக்கேட்டபோது, அவர் மாற்றுத்திறனாளி எனவும், விழா மண்டபத்தின் ஒரு பகுதியில், வெளியே காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேடையில் இருந்து பயனாளிக்கான ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் எடுத்துச் சென்று மாற்றுத்திறனாளி வின்சென்ட் ஜெயராஜ் இடம் வழங்கினார். எம்எல்ஏவுடன் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மேடையில் இருந்து இறங்கிச் சென்று மாற்றுத்திறனாளியிடம் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
நிகழ்வில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், சோம.கண்ணப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அ.மூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, டாக்டர் வி.சௌந்தர்ராஜன், ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள், இன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) க.செல்வேந்திரன் வரவேற்றார். நிறைவாக, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மா.சாமிநாதன் நன்றி கூறினார்.