தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிவறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பு என மாற்றி அமைக்க வேண்டும் . 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும், 20 ஆண்டுகள் பனி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. இதில் பொருளாளர் சூர்யா, உறுப்பினர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

