தஞ்சாவூர்: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை தாசில்தார்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பதவி உயர்வைப் பாதுகாக்கும் ஆணைகளை விரைவில் வழங்க வேண்டும்.
திட்டப் பணிகளை மேற்கொள்ள போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் அடிப்படை, கூடுதல் தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பன போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் 48 மணிநேர தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தஞ்சாவூர் தாசில்தார் பணியாற்றும் 33 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் தாசில்தார் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் தெரியாமல் பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.