கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் வீடியோ கான்ப்ரன்சில் ஆஜராகி காவல் நீட்டிப்பு செய்ய காவல் துறை சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு தவெக வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேரில் ஆஜர்படுத்திய பிறகே நீதிமன்ற காவல் நீட்டிக்க வேண்டும் என வாதிட்டனர். அதனை
தொடர்ந்து நேற்று மதியம் குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அரசு வழக்கறிஞர் தரப்பினர் சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்கும் வரை நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என வாதிட்டனர். இதற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கை சிபி ஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிறப்பு புலனாய்வு குழு செயழிலந்து விட்டதாகவும், அவர்களின் வாதத்தை ஏற்க கூடாது எனக் கூறி பல்வேறு வழக்கு மேற்கோள் காட்டி வாதாடினர். இதனை தொடர்ந்து நீதிபதி காவல் நீட்டிப்பு கிடையாது என்றும், அவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை அடுத்து இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த தமிழக வெற்றி கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பவுன்ராஜ் ஆகியோர் வெளியே வந்தனர். அவர்களை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வரவேற்றனர். இதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக கரூர் புறப்பட்டு சென்றார்.