தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை (28.1.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கழகச் செயல்வீரர்கள் மட்டும் இதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

