தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.
ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.