கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றார்.
இதன்படி, இந்தாண்டு கொளத்தூர் ஜவகர் நகர் 1வது சர்குலர் சாலையில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார். இதன்பின்னர் அவர்கள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதன்பின்னர், அங்கிருந்த 800 பேருக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதல்வர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 3 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை முதல்வர் வழங்கினார். அதே பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கொளத்தூர் தொகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் 3500 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். திருவிக. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிகாஸ்டர் சாலையில் உள்ள தனியார் தொழிற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் துப்புரவு பணியாளர்கள் மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6ல் பணியாற்றி வரும் 1300 துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. தற்போது தேர்தல் பணிகளில் 50 சதவீதம் முடித்து விட்டீர்கள். மீதம் உள்ள பணிகளையும் சிறப்பாக முடிக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் பக்தவச்சலம் பேசும்போது, திமுகவினர் டீ குடித்து விட்டு பணி செய்வார்கள் என்றார்.
அப்படி பட்ட இயக்கம்தான் திமுக. தொடர்ந்து தேர்தல் பணிகளை சிறப்புடன் செய்யுங்கள். இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பொங்கல் பண்டிகையை மக்களுடன் கொண்டாடிவிட்டு புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த ஏராளமான பெண்கள், முதல்வருடன் செல்பி எடுத்தனர். முதல்வரும் பொறுமையாக நின்று ஒவ்வொருவருடன் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார்.

