வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Depression) இன்று காலை முதல் மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக (Deep Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரி – காரைக்கால் கடற்கரைக்கு மிக அருகில் (சுமார் 20-30 கி.மீ.) உள்ளது. இது மணிக்கு 8-10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் தரைப்பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரைப்பகுதிக்குள் வந்தவுடன் இது மேலும் வலுவிழந்து, சாதாரண தாழ்வுப் பகுதியாக (Low Pressure Area) மாறிவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும்,தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரும். மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிப்பதாகவும், கடற்கரை ஓர பகுதிகளில் காற்று வேகமாக வீசக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயல் அபாயம் முழுமையாக நீங்கியுள்ள நிலையில், மழை மட்டும் அடுத்த 3-4 நாட்களுக்கு தொடரும் என்பதால், வெள்ள அபாயம் உள்ள இடங்களில் உள்ளூர் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மேலும், 03-12-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

