நடிகை மீரா சோப்ரா தனது கார் பயணத்தின் போது சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார். பிரபல நடிகை மீரா சோப்ரா நேற்று அதிகாலை வெளியூர் பயணத்திற்காக அவர் தனியார் காருக்கு முன்பதிவு செய்திருந்தார். அந்த காரும் அவர் இருக்குமிடத்திற்கு வந்தது. மேலும் அந்த கார் மிகவும் அழுக்காகவும் துர்நாற்றம் வீசும் வகையிலும் இருந்ததோடு, அந்த வாகனத்தை ஓட்டிய டிரைவர் கடும் தூக்க கலக்கத்தில் இருந்ததும் நடிகையை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதுகாப்பு கருதி அந்த பயணத்தை 20 நிமிடங்களில் முடித்துக் கொண்டு, வேறு வாகனத்தில் சென்ற போதிலும், அந்த தனியார் வாடகை கார் நிறுவனம் அவரிடம் முழு கட்டணத்தை வசூலித்துள்ளது.
சுமார் 6 மணி நேரத்திற்கான கட்டணத்தை முன்பதிவு செய்த காரணத்தால், முழு தொகையையும் வசூலித்த அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை நடிகை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், ‘இந்தியாவில் பொது போக்குவரத்து பாதுகாப்பு தரம் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் (வாடகை கார் நிறுவனம்) பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். டிரைவரும் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டினார். எனக்கு மரண பயத்தை ஏற்படுத்தியதால், வேறு வாகனத்தில் சென்றேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த குற்றச்சாட்டுக்கு அந்த நிறுவனம் தரப்பில் இருந்து முறையான தீர்வு வழங்கப்படாத நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

