தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஆழி’. இந்த படத்தில் இந்திரந்த் ஜெகஜித், தேவிகா, வையாபுரி, தாமரை, பிர்லா போஸ், மைதிலி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில், மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசினார். அப்போது அவர்,
“சினிமா படங்கள், ஓ.டி.டி. படங்கள் என நடிகர்கள் வித்தியாசம் பார்க்கக் கூடாது. எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் நடித்தால் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும். கால ஓட்டத்துக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர், “இன்று படங்களை ரிலீஸ் செய்வதே பெரிய சவாலாக உள்ளது. ஓ.டி.டி. தளங்கள் வாங்கிய பிறகே பல படங்கள் வெளியீட்டுக்கு வரும் நிலை உள்ளது. படம் வெளியான 50 நாட்களுக்குப் பிறகே ஓ.டி.டி.யில் வர வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள். ரசிகர்களின் உண்மையான ரசனையை தியேட்டர்களில்தான் புரிந்துகொள்ள முடியும்” எனக் கூறினார்.
மேலும் எதிர்மறை கதாபாத்திரங்கள் குறித்து பேசிய அவர், “எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது நான் நிறைய கேள்விகள் கேட்பேன். ஆனால் அத்தகைய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள்தான் அதிகமாக பெயர் வாங்குகிறார்கள். ‘புஷ்பா-2′ படத்தில் கதாநாயகன் செம்மரக்கட்டை கடத்துபவராக இருந்தாலும், அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதுதான் சினிமா. இங்கே எதுவும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

