சரியான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காததே கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம். மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்காதது காரணம் என்று அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்திக்கையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை சாகுபடி பாப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக தஞ்சையில் 1,97,500 ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில்
75,250 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 99,250 ஏக்கரிலும் குறுவை சாகுபடி நடந்து பெரும்பகுதி அறுவடை முடிந்துள்ளது. அறுவடை இன்னும் 25 சதவீதம் நடை பெற வேண்டிய நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்கும் தருவாயில் உள்ளது.
அறுவடை செய்யப்பட்ட நெல்கள், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மலைபோல் குவிந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆலக்குடி, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை ஆகிய இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்கள் தேங்கியுள்ளது. இந்த நெல்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் அரசு உடன் கொள்முதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் நடமாடும் கொள்முதல் செய்திட வேண்டும். நேரடியாக அறவை மில்களுக்கு நெல்லை அனுப்பி வைக்க வேண்டும். 22 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.