Skip to content

திருச்செந்தூர் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்….விண்ணைப் பிளந்த ‘அரோகரா’ முழக்கம்..

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இன்று மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.  15 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவைக் காண  லட்சக்கணக்கான பக்தர்கள் அலைகடலென திரண்டு  வந்துள்ளனர்.  முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 1ம் தேதி முதல்  காலை, மாலை இரு வேளைகளிலும் மூலவர்,பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி – தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு நேற்று மாலை வரை 11 கால  சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  யாகசாலை வேள்வியில் சுமார் 150 சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 12ம் கால யாகசலை பூஜை நடைபெற்றது.

Image

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள்ளாக  ராஜகோபுரத்தில் உள்ள கும்ப கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அதேநேரத்தில் கோவில் விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேதங்கள் ஓதப்பட்டன.  கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் 20 ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

Image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள்  அலைகடலென திரண்டு திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இரவிலும் வண்ண விளக்குகளால் ஜொலித்த முருகன் சன்னிதானத்தை சுற்றிலும் எங்கும் மனித தலைகளாக காட்சியளித்தது.  அத்துடன் பக்தர்கள் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான வாகன நிறுத்தங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்க ஏதுவாக  மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்

தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோயில் சாலைகளில்  20,000 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன்  20  வாகன நிறுத்தங்களும் தயார் நிலையில் உள்ளது. அதேநேரம் வாகன நிறுத்தத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் காண  ஏதுவாக எல்இடி திரைகள்  அமைக்கப்பட்டுள்ளன.  மேலும்,  வாகன நிறுத்தும் இடங்களுக்கு அருகிலேயே  அன்னதான கூடங்கள் மற்றும் கழிவறைகள்,  குடிநீர் என அனைத்து தேவைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000  காவல்துறையினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!