Skip to content

தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி மேலாண்மை குறித்து நிர்வாகிகளுக்கு அவர் மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ‘திராவிடப் பொங்கல்’ என சிறப்பாகக் கொண்டாடக் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுத் தமிழகம் முழுவதும் கழகத்தினர் முன்னெடுத்த கொண்டாட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனுடன் அரசு வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையும் சேர்ந்து மக்களின் மகிழ்ச்சியை இருமடங்காக்கியுள்ளது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இனி அனைவரும் ஓய்வின்றி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

ஆளுநர் உரை குறித்துப் பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளைத் தலைப்புச் செய்திகளாக ஆளுநர் உரையில் சொல்லியிருக்கிறோம். இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால், எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திண்டாடுகின்றன. உண்மையான பிரச்சினைகள் இல்லாததால், அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப நினைக்கிறார்கள். இதற்கு நாம் துளியும் இடம் கொடுத்துவிடக் கூடாது. நமது சாதனைகளைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிநபரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை” என்று வலியுறுத்தினார்.

தேர்தல் வியூகம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “அனைத்துப் பரப்புரைகளையும் மைக்ரோ லெவலில் (Micro-level) நானே நேரடியாகக் கண்காணிப்பேன். அரசின் திட்டங்களால் 2 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். அந்தப் பயனாளிகளை நம்முடைய உறுதியான வாக்காளர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது .கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன். அதனைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எந்தத் தொகுதியில் யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் நானே (ஸ்டாலின்) களம் காண்பதாக நினைத்து 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும்” எனத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார்.

கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர், “தேர்தல் நெருங்கிவிட்டது, இனி வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டுமே இருக்க வேண்டும். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன். தேர்தல் வருகிறது என்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். தனிநபர்களை விட கட்சிதான் பெரிது. உட்கட்சிப் பிரச்சினைகளைத் தவிர்த்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்” என்றார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக உறுதியாக நிற்பது திமுகதான் என்பது இந்தியாவுக்கே தெரியும் என்று குறிப்பிட்ட அவர், திமுகவை வீழ்த்தப் பல சதித்திட்டங்கள் தீட்டப்படலாம் என்றும், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தச் சிலர் முயல்வார்கள் என்றும் தெரிவித்தார். அத்தகைய சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமல், அடுத்த 3 மாதங்கள் மிகுந்த பொறுமையுடனும் உழைப்புடனும் பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!