கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை இராதாகிருஷ்ணன் பேட்டி.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சார்பாக சிலர் இப்பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு நீதிமன்றத்தை நாடி உங்கள் கோரிக்கைகளை வைக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக ராதாகிருஷ்ணன் கூறினார். அதனையடுத்து கோவில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உள்ளே நடந்த பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளித்து, அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சுமார் 4 மணி நேர போராட்டம் முடிவிற்கு வந்தது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,
பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில் நிலங்களை பட்டா போட்டு பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும். பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். அதே சமயம் தவறு செய்த அறநிலையத்துறை, வருவாய் துறை, பத்திர பதிவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும், பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.

