உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பம்ராவ்லி விமான தளத்தில் இருந்து, இந்திய விமான படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில் தலைமை விமானி பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே ஆகிய இரண்டு விமானிகள் பயணித்தனர்.
மதியம் சுமார் 12:30 மணியளவில் ராம்பாக் பகுதி அருகே பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த விமானம் அருகில் இருந்த நீர் செடிகள் நிறைந்த குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டர் விரைந்தது. இருப்பினும், விமானிகள் இருவரும் அவசரகால பாராசூட் உதவியுடன் விமானத்திலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

