குடியரசு தின விழாவையொட்டி கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் சந்தேகப்படும் யாரேனும் உலாவுகிறார்களா? என சோதனை செய்யப்பட்டது. காட்டூர் போலீஸ் நிலைய குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியன் தலைமையில் போலீசார் காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பூத் அருகே சிலர் கையில் பையுடன் நின்று இருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வரவே அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அதில் ஒருவன் தான் இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியனை குத்த முயன்றார். அவர் தடுக்க முயன்ற அவர்களை பிடிக்க முயன்றார். இதில் அவருக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் ரவுடிகள் போலீசாரை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.
இதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அதில் போலீசாருடன் தகராறு செய்து கத்தியால் குத்தியது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆல்பின் தாமஸ் என்பது தெரியவந்தது. உடன் வந்தது திருச்சூரை சேர்ந்த முகமத் ஷாலி மற்றும் தக்ரூ என்பதும் தெரிந்தது. போலீசார் அவர்கள் மீது ஆயுத தடை சட்டம், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடினர். அவர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களா? எதற்காக கோவை வந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். காந்திபுரம் பஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து போலீசாரின் தேடுதலில் ரவுடிகளான ஆல்பின், முகமது ஷாலி கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடிகளை பிடிக்க சென்ற போது, பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு மாவு கட்டு போடப்பட்டது. தலைமறைவாக இருக்கின்ற ரவுடி விஜித்தை போலீசாரால் தேடி வருகின்றனர்.