Skip to content

திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் – அலமேலு தம்பதியினரின் மகன் திருவேங்கடன் (25). இவர் திருச்சி பிராட்டியூர் அடுத்துள்ள புங்கனூர் கிராமம் மலைப்பட்டி சந்திர நகரில் நண்பர்களுடன் தங்கியிருந்து, தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அரசுப் பணிக்கான பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அறையிலிருந்து வெளியே சென்ற திருவேங்கடன் மீண்டும் திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த 9-ம் தேதி ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் திருவேங்கடன் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், திருவேங்கடன் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அந்தப் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டதாகவும் அவரது பெற்றோர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், போலீசார் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கொலையைத் தற்கொலையாக மாற்ற முயற்சிப்பதாகக் கூறி, நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் இரு மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ். பாலாஜி தலைமையில், வி.சி.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். அங்கு வந்த போலீசாரிடம் எம்.எல்.ஏ எஸ்.எஸ். பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மர்ம மரணம் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் சந்தேகிக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்போது திருவேங்கடனின் மரணம் குறித்து விசாரணை நடத்த சோமரசம்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அவரது உடலில் காயம் ஏற்பட்டது எப்படி, காணாமல் போன அவரது செல்போன் எங்கே என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் திருச்சி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!