Skip to content

வால்பாறை மயான பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் வெளியே கிடந்த அவலம் – மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை தீயணைப்புத் துறை அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி மயானத்தில், புதைக்கப்பட்ட சடலம் ஒன்று வெளியே கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை மயானப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் வெளியே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், வெளியே கிடந்த அந்த உடலை மீட்டு மீண்டும் அதே இடத்தில் நல்லடக்கம் செய்தனர்.

இது குறித்துப் பொதுமக்கள் கூறுகையில், “இந்த மயானத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், எங்கு தோண்டினாலும் புதைக்கப்பட்ட பழைய சடலங்களே வெளிவருகின்றன. புதிதாக ஒரு உடலைப் புதைக்கக் குழி தோண்டும்போது, ஏற்கனவே உள்ள சடலங்களை வெளியே வீசும் அவலநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இது சுகாதாரச் சீர்கேட்டிற்கும், மனித நேயமற்ற செயலுக்கும் வழிவகுக்கிறது” என்று குற்றம் சாட்டினர்.

கடந்த 2021-ஆம் ஆண்டே வால்பாறை பகுதியில் மின் மயானம் அமைப்பதற்காக நகராட்சி சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் நிதி ஒதுக்கீட்டுடன் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கால்தான் இதுபோன்ற அவலங்கள் தொடர்வதாக மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி உடனடியாக மின் மயானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!