காந்தி மார்க்கெட்டில் எலக்ட்ரிக்கல் வயர்கள் திருட்டு:
திருச்சி காந்தி மார்க்கெட் பள்ளிவாசல் அருகே யாசர் அரபத் என்பவருக்குச் சொந்தமான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக்கல் வயர்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து யாசர் அரபத் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வரகனேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் (21) என்பவரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட எலக்ட்ரிக்கல் வயர்களைப் பறிமுதல் செய்தனர்.
பாலக்கரையில் பைக் திருட்டு
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (38), தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடு போனதாகப் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் கோவை சாய்பாபா நகரைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பதும், அவர் ஓட்டி வந்தது ஆரோக்கியதாஸிடம் திருடிய பைக் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சந்தோஷை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

