Skip to content

தேமுதிக நிர்வாகி பலி …. கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவிப்பு…

நேற்றைய தினம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாடினர். அவரது நினைவாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவரது முழு உருவச் சிலையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்துவைத்தார்.

இதனிடையே, கடலூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக, கொடிக்கம்பம் நட முயன்ற போது, தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் (40) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடலூரின் நடுக்குப்பம் என்ற கிராமத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் கொடிக்கம்பம் உரசி மின்சாரம் தாக்கியபோது, வெங்கடேசனை காப்பாற்ற முயன்ற மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, முத்தாண்டிகுப்பம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த வெங்கடேசனின் 2 மகன்களின் கல்வி செலவை ஏற்பதாக விஜயபிரபாகரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!