திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்டு குடியரசுநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிமக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதகாலமாக அப்பகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் மேலும் கோடை காலம் என்பதால் மிகுந்த தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக 36வது வார்டு கவுன்சிலர் வெற்றிகொண்டான் பலமுறை நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் இதுவரை
நகராட்சி சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அப்பகுதிமக்கள் பலமுறை துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று பல திருப்பத்தூரிலிருந்து ஆலாங்காயம் செல்லும் சாலையில்50க்கும் மேற்பட்டோர் காலி குடங்கள் வைத்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன்பின் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அதிகாரியிடம் பேசி இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.
