சென்னைஅருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை மேலும் வலுவிழந்து, தற்போது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தற்போது வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் புயல் அபாயம் முழுமையாக நீங்கியுள்ள போதிலும், மழை மற்றும் காற்று தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 2) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழை (115.6 மி.மீ.க்கு மேல்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதைப்போல, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை தொடரும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8-10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24-48 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து தாழ்வு நிலையாக (Low Pressure Area) மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதன் எச்சமாக வட தமிழகத்தில் டிசம்பர் 8 வரை மழை தொடரும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், கனமழை ஏற்பட்டால் வெள்ள அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல தடை நீடிக்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் வெளியே வராமல், குறைந்த இடங்கள், மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்லாமல் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. NDRF, SDRF குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மழை தொடர்வதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து சிரமங்களும், மின்தடையும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

