வரும் சட்டப்பேரவைத் தேர்தல், தனக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர் என வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது… “மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக வேறு வலியில்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் நம்முடைய தவெக.
நாம் ஒவ்வொரு வீட்டில் உயிராக உணர்வாக இருக்கிறோம். ஒவ்வொரு ஊராகச் சென்று உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் நமக்கு எதிராக நடைபெறும் சூழ்ச்சிகள் பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும். அதனால் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்.
நம்முடைய ஆட்சி அமைந்ததும் நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களை எல்லாம் சந்திப்பேன். வரும் தேர்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல். தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும்தான் தேர்தல் என்றும் தமிழ்நாட்டுக்கும் என்டிஏ-க்கும்தான் தேர்தல் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதென்ன நாடாளுமன்றத் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும். தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவான சூப்பர் மக்கள். உண்மையில் இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர். சரியான நிர்வாகம் செய்யாத திமுக அரசுக்கும் தவெகவுக்கும் இடையே நடக்கிற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு ‘
தூயசக்தி தவெகவுக்கும் தீய சக்தி திமுகவுக்கும் இடையே நடக்கிற போர் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது இல்லை. 2026 தேர்தலில் தவெக தில்லாக நிற்கும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நடக்கிற தேர்தல் அல்ல. 50 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் மாதிரி. இது அதிசய தேர்தல். லஞ்சம், ஊழலை எதிர்ப்பதால் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து என்னை எதிர்க்கிறார்கள்.
வரும் தேர்தலில் திமுகவும் தவெகவுக்கும்தான் போட்டியே” என்று பேசினார்.

