திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதங்களை முன்வைத்தார். “மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும்; அரசு தலையிட முடியாது” என்று அரசு தரப்பு தொடங்கியது.
அரசு தரப்பு வாதம்: “73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. 1994-ல் இருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. 2014-ல் இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது. தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதி ஆவணங்கள் இல்லாமலேயே உத்தரவிட்டார்” என்று குற்றம் சாட்டினார்.
நீதிபதிகள் கேள்வி: “மலை உச்சியில் உள்ள தூண் சர்வே தூண்தானா என்று உறுதி செய்தீர்களா?” என்று கேட்டனர். அரசு தரப்பு, “ஆம், அது சர்வே தூண்தான். மலை உச்சியில் நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தம்; மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தம்” என்று பதிலளித்தது. “பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி. தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்யும்” என்று வலியுறுத்தினார்.
தனி நீதிபதியின் உத்தரவில் குறைகளை சுட்டிக்காட்டிய அரசு தரப்பு, “ராமஜென்மபூமி வழக்கை மேற்கோள் காட்டியது தவறு. அந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகச் சொல்லியிருக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தின் பதிலை கருத்தில் கொள்ளவில்லை. 1947 ஆகஸ்டுக்குப் பிறகு இருந்த நிலையைத் தொடர வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தனி நீதிபதி தவறாகப் பயன்படுத்தினார்” என்று வாதிட்டது.நீதிபதிகள் கேள்வி: “தீபம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அந்தக் கோரிக்கை இருந்தால், அதை ஏன் செய்யக் கூடாது?” என்று கேட்டனர்.
அரசு தரப்பு, “மனுதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெறலாம். ஆனால் இப்போது அது கோரிக்கை வைக்கப்படவில்லை” என்று பதிலளித்தது. “மிக முக்கியமான விவகாரத்தில் 3 நாட்களில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அமைதி, பாதுகாப்பு கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.விசாரணை தொடர்கிறது. அரசு தரப்பு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியுள்ளது. இந்த வழக்கு தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை, நீதிமன்ற உத்தரவு அமல், இந்து உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்திய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த விசாரணையில் மனுதாரர் தரப்பு வாதங்கள் கேட்கப்படும்.

