திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, “வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தீப விழா யாரையும் பாதிக்காது. மத நல்லிணக்கம் என்பது ஒரு சமூகத்தின் மதச் செயல்பாடுகளைத் தடுப்பதால் வருவதல்ல; ஒன்றாக வாழ்வதால் மட்டுமே வரும்” என்று தெளிவாகத் தீர்ப்பளித்தது.
இதனால் நவம்பர் 28 அன்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு முழுமையாக நிலைத்து நிற்கிறது. அந்த உத்தரவில், “மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கோயில் சொத்து. 1923-ல் பிரிவி கவுன்சில் அங்கீகரித்த உத்தரவின்படி, சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான பாரம்பரியத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. நேற்று (டிசம்பர் 3) காலை பக்தர்கள் தீபம் ஏற்ற மலைக்கு செல்ல முயன்றபோது, மதுரை கலெக்டர் பிறப்பித்த 144 தடை உத்தரவால் போலீசார் தடுத்தனர்.
இதனால் ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 13 பேர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். கோயில் சாலைகள் முழுவதும் தடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவசரத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.அரசு தரப்பில், “தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது, சமூக நல்லிணக்கம் கெட்டது” என்று வாதிடப்பட்டது. ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு, “ஒரு நாள் மட்டும் நடக்கும் விழாவைத் தடுப்பதால் எப்படி நல்லிணக்கம் வரும்?” என்று கேள்வி எழுப்பி, அரசின் வாதத்தை நிராகரித்தது.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தனி நீதிபதி சுவாமிநாதனே மீண்டும் விசாரிப்பார் என்று உத்தரவிடப்பட்டது.இந்தத் தீர்ப்பால் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா இனி தடையின்றி நடைபெறும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் அரசு தரப்பில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம், பாரம்பரிய உரிமைகள், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைப் பற்றிய பெரிய விவாதத்தைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

