மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
தற்போது இந்து தர்மா பரிஷித் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முழுவதையும் ஒன்றிய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்; மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் 24 மணி நேரமும் விளக்கு எரிய வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கினை ஒத்திவைத்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், ‘உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம்’ என விளக்கம் அளிக்கப்பட்டது.

