Skip to content

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம் செய்ய முடியும்.  இங்கு வரும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு தாரளமாக காணிக்கை செலுத்துகிறார்கள். இதனால் தினமும் பல கோடி ரூபாய் காணிக்கை  கிடைக்கும்.

அடுத்ததாக  திருப்பதி என்றால் லட்டு பிரசாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.  திருப்பதி லட்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் மிகவும் பிரபலமானது. அத்தகைய லட்டு நேற்றுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 310 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தனித்துவமானது.  சுவை, தூய்மை மற்றும் பக்தியுடன் தயாரிக்கப்பட்டு, உலகின் நம்பர் 1 பிரசாதமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது திருப்பதி லட்டு.

பிரசாதமாக லட்டு வழங்கும் முறை 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அன்று தொடங்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது. 2010ம் ஆண்டு வரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் 1 லட்சம் லட்டுகளை தயாரித்து வந்தது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால் தற்போது தேவஸ்தானம் தினமும் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகளை தயாரிக்கிறது. இதற்காக ஏராளமான கவுன்டர்கள் அமைக்கப்பட்டு லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் அன்று தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், சிலர் கி.பி 1803ல் பூந்தி என்று அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 1940ல் லட்டு பிரசாதமாக மாறியதாக கூறுகின்றனர். அவ்வாறு கடந்த 1940ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டதாக எடுத்துக் கொண்டால் லட்டுவின் வயது 83 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில், ஒரு லட்டு பிரசாதம் எட்டணாவிற்கு (50 காசு) வழங்கப்பட்டது, பின்னர் அது ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.15, ரூ.25க்கு விற்கப்பட்டது, தற்போது ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மிகவும் சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டுக்கு காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரையும் பெறப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், திருப்பதி லட்டு புவியியல் குறியீடாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

error: Content is protected !!