திருச்சி, திருவானைக்கா வல் ஜம்புகேசுவரர் உடனுறை அகி லாண்டேஸ்வரிகோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை), காலை 8.05 மணிக்கு நடைபெற்றது . இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 26- ந் தேதி துவங்கியது. அதன் பின்னர் கடந்த மார்ச் 15-ந்தேதி எட்டுத்திக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷபவாகனம், காமதேனுவாகனம், சூரியசந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்று வந்தது. 6 ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் சுவாமியும், அம்பாளும் ஒருதேரிலும், அகிலாண்டேசுவரி தாயார் ஒருதேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்,
பின்னர் தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன்செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
முதலாவதாக சுவாமியும், அம்பாளும் எழுந்தருளிய தேரை பக்தர்கள் இழுத்துவந்து நிலைக்கு வந்தபின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச்செல்லப்பட்டது.
இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேரானது 4வீதிகளிலும் வலம் வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. (காலை 10 மணிக்கு வந்தடையும்)
பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுளை இந்துசமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டனர்.

