திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்தவர் மதுசூதனன்(45). பாஜக மாவட்ட விவசாயப் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவரான இவரை, குடவாசல் அருகேயுள்ள ஓகை பகுதியில் கடந்த 8-ம் தேதிஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பிவிட்டது. இதில் பலத்தகாயமடைந்த மதுசூதனன், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, மதுசூதனன் மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் பேரில், குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இதில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மாவட்டச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் குறித்துசமூக வலைதளங்களில் மதுசூதனன் அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வந்ததையடுத்து, அவர் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், காட்டூர் பகுதியைச் சேர்ந்தஜெகதீசன் ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், தேடப்பட்டு வந்த பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரை போலீசார் நேற்று கோயம்புத்தூரில் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும்சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
