திருச்சி வடுகூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மந்தை பகுதி கோகினூர் தியேட்டர் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் அம்மன் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இரட்டை வாய்க்கால் புறம்போக்கு நிலப் பகுதியை அழகுபடுத்தி பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது .
அதை தொடர்ந்து இன்று மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மாரியம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது இரட்டை வாய்க்கால் புறம்போக்கு பகுதிக்கும், மாரியம்மன் கோவில் மந்தை பகுதிக்கும் சம்பந்தம் கிடையாது.
அரசு புறம்போக்கு இடத்தில்தான் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால் கோவில் தரப்பினர் அது எங்கள் கோவிலுக்கு சொந்தமான நிலம் என தெரிவித்தனர்.