கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் பொன்னம்பலமேடு பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (28). பெரியார் புலிகள் காப்பகத்தில் வனத்துறை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விறகு சேகரிப்பதற்காக அனில் குமார் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். மேலும், இதுகுறித்து போலீசார், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வனத்துறையினரும், போலீசாரும் தேடி வந்தனர்.
இந்நிலையில், 2 நாட்கள் கழித்து அனில் குமார் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலி அடித்துக்கொன்று அவரின் உடல் பாகங்களை சாப்பிட்டுள்ள நிலையில் எஞ்சிய பாகங்களை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அனில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
