திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் ஆர்டிஓ பன்னீர்செல்வம் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். சாலை விபத்துகளில் உயிரிழப்பை குறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 250க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பேரணி நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி ஆசிரியர் நகர் வரை சென்றது. இதனை தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்போம், தலைக்கவசம் கட்டாயம் அணிவோம் என்ற உறுதிமொழியையும் பங்கேற்றவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

