சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சரக்கு ரயிலின் 18 டேங்கர் பெட்டிகள் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தீவிபத்தைத் தொடர்ந்து சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை திருவள்ளூரில் இருந்து மட்டும் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் நடு வழியில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பயணிகளின் வசதிக்காக திருவள்ளூர் – அரக்கோணம் மார்க்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் 8 பயணிகள் விரைவு ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 5 ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை சென் ட்ரலில் இருந்து
1. காலை 5.50 மணிக்கு மைசூருக்கு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில்.
2. காலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்
3. காலை 6.25 மணிக்கு திருப்பதி புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில்
4. காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்
5. காலை 7.25 மனிக்கு பெங்களூரு புறப்பட இருந்த டபுள் டெக்கர் விரைவு ரயில்
6. காலை 7.40 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த பிருந்தாவன் ரயில்
7. காலை 9.15 மணிக்கு நகர்சோல் புறப்பட இருந்த நகர்சோல் விரைவு ரயில்
8. காலை 10 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த கோவை அதிவிரைவு ரயில் ஆகிய 8 பயணிகள் விரைவு ரயில் சேவை முழுவதுமான ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூருவில் இருந்து தனப்பூர், ஜெசித், பாட்னா செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இதேபோல் லக்னோ – யஸ்வந்த்பூர், எர்ணாகுளம் – பாட்னா, அகமதாபாத் – சென் ட்ரல், லோக்மான்ய திலக் – சென்னை சென் ட்ரல் இடையேயான விரைவு ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. திருப்பதி – சென்னை, மும்பை – சென்னை சென்ட்ரல், லோக்மான்ய திலக் – கரைக்கால் ரயில்கள் கூடூர் வவியாக இயக்கப்படுகின்றன.