2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக , அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. பாஜக தலைவர்களில் ஒருவரான அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்றார். இதை நேற்று மறுத்து எடப்பாடி பேட்டி அளித்தார். அப்போது அவர் அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்றார்.
இந்த நிலையில் எடப்பாடிக்கு பதில் அளித்து அண்ணாமலை இன்று பேட்டி அளித்தார். அவர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்றார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று அளித்த பேட்டி: ஆட்சியில் பங்கு பெறுவது என்பது ஒவ்வொரு கட்சி தெண்டனின் விருப்பம். இதைத்தான் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறினார். அதிமுகவுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அமித்ஷாவுடன் பேசிக்கொள்ளட்டும். ஆனால் என்னை பொறுத்தவரை அமித்ஷா சொன்னது தான் வேதம். தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இதை விட்டு விட முடியாது.எனது தலைவர்களின் நிலைப்பாடு மாறும்வரை நானும் நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன்.
அதிமுக கூட்டணியை உருவாக்கியதில் என் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி என்று பாமக, கிருஷ்ணசாமி, தினகரன் ஆகியோரும் கூறிவிட்டனர். அமித்ஷா சொல்லியதைத்தான் நான் கேட்க வேண்டும். அப்படிஇல்லை என்றால் இந்த கட்சியில் இருக்க எனக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
எடப்பாடி கருத்து தனித்து ஆட்சி தான். ஆட்சியில் பங்கு கேட்பது தவறு இல்லை. ஆனால் தமிழக மக்கள் அதை விரும்பமாட்டார்கள். என்டிஏ கூட்டணி தலைவர் எடப்பாடி தான். எடப்பாடி சொல்லும் கருத்து தான் இறுதி கருத்து. தனித்து ஆட்சிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். ஆட்சி அமைப்பது எடப்பாடியார்.
இது குறித்து ஒருவாரத்தில் பேசி முடிவு செய்வோம். எங்கள் பொதுச்செயலாளர் தெளிவாக சொல்கிறார். மாற்று கருத்து எதுவும் இல்லை. திமுக மீதான கோபம், அதிருப்தி காரணமாக மக்கள் எல்லோரும் அதிமுக பக்கம் சாய்வார்கள். எனவே தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.