சினிமா படத்தின் கிளைமாக்ஸ் ஆயிரம் இருக்கலாம் அவருடைய கிளைமாக்ஸ் என்ன என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வாக்குத்திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி சுதா பங்கேற்று தன் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து எம்பி சுதா, எம்எல்ஏ ராஜகுமார் கிட்டப்பா அங்காடி, பேருந்து நிலையம், காமராஜர் சாலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பூக்கடை, வியாபாரிகள் மருந்து கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட வணிகர்கள் நிறைந்த பகுதியில் வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்தை பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்து பெரும் முயற்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த எம்.பி சுதா செய்தியாளர்களிடம் கூறுகையில் வாக்குத்திருட்டை தடுக்க வேண்டும் என்று மக்களே தன்னெழுச்சியாக வந்து கையெழுத்து இடுவதாகவும், தேசத்தின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ,பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராடியதால் வாக்குரிமை மீண்டும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான அரசியல் கிடையாது ஒவ்வொரு மனிதனின் உரிமையும் ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி போராடி வருகிறார்.
இந்த தேசத்தை துண்டாட வேண்டும் என்று மதரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் துடிக்கின்றவர்கள் வாக்குகளை திருடுகின்றனர். நாங்கள் வெற்றி பெற்று எதிர் அணியில் உள்ளோம் தோல்வியுற்ற மோடி பிரதமராக உள்ளது வெட்கக்கேடானது. தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய எந்த கேள்விக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. வாக்குத்திருட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தும் ராகுல் காந்தியை பார்த்து மத்திய அரசு பயந்து போய் உள்ளது. இதை மறைப்பதற்காக ராகுல் காந்தி தேசத்திற்கு எதிராக பேசிவிட்டார் என்று ஒரு சம்மன் அனுப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். ஜி.எஸ்.டி மூலமாக ஒட்டு மொத்தமாக நமது பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்த மத்திய அரசாங்கம், இன்று ஜிஎஸ்டியை குறைத்துள்ளது என்றால் ஏற்கனவே ஜிஎஸ்டி என்ற பெயரில் கொள்ளை அடித்த பணத்தை எப்போது திருப்பி தருவீர்கள் என்று பதில் சொல்ல வேண்டும், இந்திய ரிசர்வ் பேங்கில் 16 லட்சம் ரூபாய் காணாமல் போன பணம் எங்கே என்று ராகுல் காந்தி கேள்வி கேட்டு பதிலில்லை. 20 ஆயிரம் கோடி செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்தான கேள்விக்கும் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
மக்களின் நலனை பாதிக்கும் ஜிஎஸ்டி 18 சதவீதம் வரியை போடக்கூடாது என்று அன்றே குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி. ஆனால், இன்று வாக்குத்திருட்டை மறைப்பதற்காக ஜி.எஸ்.டியை குறைப்பதாக நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார். நம்மோட வரி பணத்தை மட்டுமல்லாமல் வாக்குகளையும் திருடிவிட்டு இன்று ஜிஎஸ்டியை குறைக்கிறேன் என்று கூறும் மத்திய அரசு மக்களிடம் பெற்ற ஜிஎஸ்டியை திருப்பித் தர வேண்டும் என்று கூறினார். அழகிரி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற குறித்தான கேள்விக்கு அது அவரது தனிப்பட்ட கருத்து. யார் கூட்டணியில் இருக்க வேண்டும் எந்த கூட்டணியில் இருக்க வேண்டும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது ஆட்சியில் பங்கு கேட்பதா இல்லையா என்பதையெல்லாம் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். தேசத்தின் மீது பற்றும் தேசத்தின் இறையாண்மையும் ஜனநாயகமும் எவ்வளவு முக்கியமானது என்பதற்காக ராகுல் காந்தி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்று அரசியலுக்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய் புரிதல் இல்லாததால் வாக்குத்திருட்டை பற்றி பேசவில்லை. அவருடைய புரிதலை மட்டுமே வெளிப்படுத்துகிறார். வாக்கு திருட்டை பற்றி ஏன் பேசவில்லை என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். வாக்குத்திருட்டில் நமது உரிமை மீறப்படக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் உள்ளது போன்று அவருக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். சினிமா படத்தின் கிளைமாக்ஸ் ஆயிரம் இருக்கலாம் ஆனால் அவருடைய கிளைமாக்ஸ் என்ன என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும் என்று விமர்சித்தார்.