தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இன்று( ஜூன் 10) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.,
இதேபோல் நாளை (ஜூன் 11ம் தேதி) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.