Skip to content

திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக எடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் மருங்கூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கடந்த 16ம் தேதி மாலையில், காவல்கிணறு பாலத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்த மகேஷ் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவை இழந்தார். தொடர்ந்து அவரை கோமா நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் மகேசுக்கு மூளை சாவு ஏற்பட்டது. மீண்டும் அதில் இருந்து மீட்டுகொண்டு வர முடியவில்லை. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இது குறித்து மகேசின் உறவினர்கள், குடும்பத்தினரிடம் பேசினர். திருமணமான 8 மாதமே ஆகிறது. எப்படி சாத்தியம் என்று முதலில் உறவினர்கள் கூறினர். ஆனால் டாக்டர்கள் நிலைமையை எடுத்து கூறினர். மகேஷ் நம்மை விட்டு மெல்ல, மெல்ல சென்று கொண்டிருக்கிறார்.

நீங்கள் எடுக்கும் முடிவால் பிறருக்கு உயிர் கொடுக்க முடியும் என மகேசின் மனைவியிடம் டாக்டர்கள் கூறினர். கணவரால் பிறருக்கு உயிர் கொடுக்க முடியும் நிலை வரட்டும். அவரை மண்ணோடு மண்ணாக்க விரும்ப வில்லை என முடிவு செய்த அவரது மனைவி, கணவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ஆபரேஷன் மூலம் மகேசின் உடல் உறுப்புகளை தானமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். குமரி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் மேற்பார்வையில் இதற்கான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று காலை இதற்கான அறுவை சிகிச்சையை செய்தனர். அதன்படி மகேசின் 2 கிட்னியில் ஒன்று திருச்சி மருத்துவமனைக்கும், மற்றொன்று காரைக்குடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தோல் மதுரை மருத்துவமனைக்கும், லிவர் (கல்லீரல்) திருச்சிக்கும் கொண்டு சென்றனர்.

கண் நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் உறுப்புகளை தானமாக கொண்டு செல்லும் வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் காவல் துறை சார்பில் போக்குவரத்து நிறுத்தி தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானமாக வழங்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகேசின் மனைவிக்கு டாக்டர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் மகேசின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் மகேசின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மகேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

error: Content is protected !!