Skip to content

தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

  • by Authour

தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தியாகராஜன், மாநில பொருளாளர் வீரப்பன், மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர தலைவர் காமராஜ் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
இதையடுத்து மாநிலத் தலைவர் பழனியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் மிகத் தெளிவாக உத்தரவிட்டு அது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஒரு ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும்போது கீழே உள்ள மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது என்பது உலகளாவிய கோட்பாடாகும் .

இது எல்லாவற்றையும் மீறி கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஜல் சக்தி நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்ததும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க எடுத்துக் கொண்டதும் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. இது ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முற்றிலும் மாறானது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது மத்திய அரசின் அழுத்தத்தால் தான். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மேகதாது அணை வந்தால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.

இந்த சூழ்நிலையில் வருகிற 8-ம் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய விவாத கூட்டத்தில் தமிழ்நாடு ,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும். மேகதாது அணைக்கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் தஞ்சையில் வருகிற 5-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். மேகதாது அணை விவாகரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தின் முடிவில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமன் நன்றி கூறினார்.

error: Content is protected !!