திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. உறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். வழக்கம்போல் நேற்று இரவு அந்திகால பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலையில் சென்று பார்த்தபோது, கோவிலின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கோவில் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கோவிலில் இருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் 4 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் உண்டியலை இரும்பு ராடுகளால் நெம்பி, தூக்கிச் செல்ல முயன்றனர் ஆனால் இயலவில்லை. அதைத் தொடர்ந்து கொள்ளை முயற்ச்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இது பற்றி உறையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரபல முருகன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் நுழைந்து உண்டியலை உடைக்க முயன்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

