மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை சிறையில் அடைக்கப்பட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண் பெற்று, சிறைக்கைதிகள் மத்தியில் முதல் இடத்தையும் பெற்ற ஹரிஹரசுதன் ஐடிஐ படிப்பதற்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றலாகி ஆறுமாதத்திற்கு முன்பு வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று தனது சிறையறையில் இருந்த ஹரிஹரசுதனை சிறை துணை ஜெயிலர் மணிகண்டன் என்பவர், ஏண்டா நாயே படுத்துக் கொண்டிருக்கிறாய் என்றும், ஹரிஹரசுதனின் ஊரைக்கேட்டவுடன் ஆபாசமாக பேசி ஷூ காலால் மிதித்து 30பேரைக்கொண்டு, ஹரிஹரசுதனை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கியதுடன், லத்தியை ஆசனவாயியில் நுழைத்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதுடன் மின்விளக்கு, மின்விசிறி இல்லாத இருட்டு அறையில் அடைத்து வைத்து உணவு வழங்காமல் சித்திரவதை செய்துவருவதாகவும் தங்களது மகனை காப்பாறு மாறும், அதே நேரம் ஹரிஹரசுதனை அடித்து துன்புறுத்தும் துணை ஜெயிலர் மணிகண்டன், ஜெயிலர் பழனி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்ககோரி ஹரிஹரசுதனின் பெற்றோர்கள் வழக்கறிஞர்களுடன்சென்று கேகே நகர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார்மனு அளித்தனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள திண்டுக்கல்லை சேர்ந்த குற்றவாளியான அலெக்ஸ் என்பவர் தனது மனைவியுடன் சிறையில் இருந்து செல்போனில் பேசியபோது ஹரிஹரசுதனை நிர்வாணமாக்கி குற்றுயிரும், குலையுயிருமாக போட்டிருந்தது தொடர்பாகவும், அவனுக்கு தண்ணீர் கொடுத்த தன்னையும் ஜெயில் அதிகாரிகள் மிரட்டியது தொடர்பாகவும் மனைவியுடன் பேசிய ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயகணேசன் கூறுகையில்… கடந்த திங்கட்கிழமை மனுபோட்டு ஹரிஹரசுதனை பார்க்கும்போது, உடல்முழுவதும் ரத்தகாயங்கள் ஏற்பட்டிருந்தநிலையில், உடனே அவரை போலீசார் கூண்டோடு தூக்கிச்சென்றதாகவும், பெற்றோரை கூட சந்திக்க சிறைத்துறை மறுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய வழக்கறிஞர், திருபுவனம் அஜித்குமாருக்கு நேரிட்ட கதி ஹரிஹரசுதனுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், இன்னும் மூன்றுநாட்களில் நிச்சயம்ஹரிஹரசுதனும் இறந்துவிடுவார் என அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
ஹரிஹரசுதனின் தாயார் அங்கம்மாள் கூறுகையில்… எனது மகனைப் பார்க்க மனுபோட்டு கேட்டபோதுகூட உரிய பதிலளிக்கவில்லை என்றும், எனது மகன் என்ன நிலையில் உள்ளான் என்பது கூட தெரியவில்லை ஐந்து நாட்களாக நிர்வாணமாக போட்டுள்ளனர் என்றும், எப்படியாவது எனது மகனை கண்ணில் காட்டுங்கள் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.