மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அங்கம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஹரிஹர சுதன். இவரை 2020-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 400 மதிப்பெண் பெற்றார். பின்னர் ஐடிஐ படிக்க விண்ணப்பித்தார்.
இந்த படிப்புக்காக என் மகன் 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு இருந்தவாறு ஐடிஐ படித்துக் கொண்டிருந்தார். கடந்த 26.7.2025 அன்று சிறை அறையில் படுத்திருந்த என் மகனை துணை ஜெயிலர் லத்தியால் தாக்கியுள்ளார். அவரது ஆசனவாயில் லத்தியை செருகி உள்ளார். சிறை வார்டர்களும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் என் மகன் படுகாயம் அடைந்தார். சிகிச்சையும் அளிக்கவில்லை. என் மகனுக்கு தண்ணீர் கொடுத்த அலெக்ஸ் என்ற கைதியையும் சிறைக் காவலர்கள் தாக்கியுள்ளனர். அவரை நிர்வாணமாக்கி தனிமை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தகவல் தெரிந்து என் மகனுக்கு சிகிச்சை அளிக்கக்கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகனை சிறையில் தாக்கியது மனித உரிமை மீறல். எனவே திருச்சி சிறைத்துறை டிஐஜி பழனி, துணை ஜெயிலர் மணிகண்டன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு சிறையில் நடந்த கொடுமைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தனிமைச் சிறையில் இருக்கும் என் மகனை விடுவிக்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சிறையில் மனுதாரர் மகன் தாக்கப்பட்டது தொடர்பாக சிறைத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும், அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மகன் திருச்சி சிறையில் சக கைதிகளுடன் இணைந்து ஜெயிலர் மணிகண்டனுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரின் மகன் ஹரிஹரசுதன் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகார் மற்றும் ஜெயிலர் மணிகண்டன் அளித்த புகார் இரண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.