திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை உள்ளடக்கிய கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்ளிலும் சுமார் 2.40 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன.
திருச்சி மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு 490 டன் வரை குப்பைகள் சேரும். மக்கும் குப்பைகள் நுண் உரம் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்படும்.
இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என இன்று மாநகரில் வழக்கத்தைவிட சுமார் 130 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.
தீபாவளி பண்டிகை நாளில் மாநகராட்சி கோட்டங்களில் நாள்தோறும் வரும் குப்பை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 5 டன் குப்பை வரப் பெறும். ஆனால் பெரிய கடை வீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகள் கொண்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இருந்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 15 டன் குப்பை வந்துள்ளது.
தீபாவளி மறுநாளான இன்று (21.10.2025) மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பைகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தினர்.
திருச்சி மாநகரில் இரவுகளிலிருந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
மழை பெய்து வரும் நிலையில் அதையும் பொருட்படுத்தாமல்
குப்பைகளை சேகரித்து
தூய்மை செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.