திருச்சி காந்தி மார்க்கெட் சிஐடியு சுமை பணி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ஜி.கே. ராமர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்டுகளில் 350 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் ஒரு லாரி செட்டில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 12 தொழிலாளர்களை நீக்க முயற்சித்து அவர்களுக்கு பதிலாக வெளிமாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதை கண்டித்தும்.
20 ஆண்டுகாலமாக வேலை செய்து வந்த 12 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும் கடந்த 7-ந்தேதி சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என காவல்துறை அளித்த உத்தரவை மீறி அன்று மாலை லாரிகளில் வந்த சரக்குகளை மாற்றுத் தொழிலாளர்களை வைத்து இறக்கப்பட்டது. இதனை கண்டித்து அன்று இரவு சுமைப்பணித்தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இது நாள் வரை அந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து இன்று முதல் சுமைப்பணி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளோம்.கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

