திருச்சி அரசு போக்குவரத்து கழக தீரன் நகர் கிளையில் நடத்துநராக பணியாற்றியவர் வெள்ளைச்சாமி (50). இவர் இன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் டவுன்பஸ்சில் பணியில் இருந்தார். பஸ்சில் பயணிகள் அதிக அளவில் பயணித்தனர். பஸ் பாலக்கரை வரும் பொழுது நடத்துநர் வெள்ளைச்சாமி மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 2.10 மணிக்கு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். உடனடியாக கிளை மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் சென்று வெள்ளைச்சாமி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இறந்துபோன வெள்ளைச்சாமி மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர். குழந்தைகள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.