திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட கலைஞர் பேருந்து முனையத்தை மே 9-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 16ம் தேதி முதல் கலைஞர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்தில் பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ்நிலையத்தை பார்க்கும் மக்கள் அதன் கட்டுமானங்களையும், அடிப்படை வசதிகளையும் பார்த்து அசந்து போகிறார்கள். விமான நிலையம் போல பஸ்நிலையம் பளபளக்கிறது. இப்படியே இதனை பராமரிக்க வேண்டும் என பயணிகள் விருப்பம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த பஸ் நிலையத்தை பார்க்கவே சுற்றுலா பயணிகள் போல மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆசியாவிலேயே இப்படிப்பட்ட பஸ்நிலையம் இல்லை என்ற அளவுக்கு பிரமாண்டம் தெரிகிறது.
இந்த பஸ் நிலையம் விரிவாக கட்டப்பட்டு இருந்த போதிலும், பெரம்பலூர், அரியலூர் மார்க்கத்தில் செல்லும் பஸ்களையும், துறையூர் பஸ்களையும் இன்னும் ஏன் சத்திரத்தில் நிறுத்த வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
பெரம்பலூர், அரியலூர், துறையூர் மார்க்க பஸ்களை சத்திரத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றினால் சத்திரத்தில் நெருக்கடிகள் குறையும். எனவே அதனையும் இங்கு மாற்ற வேண்டும் . எல்லா பஸ்களும் ஓரிடத்தில் இருந்து புறப்படுவது தான் சரியாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த 3 வழித்தட பஸ்களை புது பஸ்நிலையத்திற்கு மாற்றாதது குறித்து மக்கள் மத்தியில் பல யூகங்கள் ஏற்படுகிறது. அதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலும் கரூர் தனியார் பஸ்கள் இன்னும் புதிய பஸ்நிலையம் செல்லாமல், ஜங்ஷனிலேயே நிறுத்தப்படுகிறது. இதனையும் புதிய பஸ்நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
புதிய பஸ் நிலையத்தில் மக்களுக்கான பெருங்குறையாக பார்க்கப்படுவது உணவுப்பொருள் விலை தான். விமான நிலையம் போல பஸ் நிலையத்தை கட்டியதற்காக , உணவு விலைகளையும், விமான நிலையம் போல உயர்த்துவதா என்று பயணிகள் கேட்கிறார்கள். மினி டிபனுக்கு ரூ.240 வசூலிக்கப்படுகிறது.
அதாவது ஒரு கல் தோசை, 2 இட்லி, ஒரு உளுந்தவடை, ஒரு காபிக்கு 240 ரூபாய் வசூலிப்பதா என மக்கள் கேட்கிறார்கள். அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. குளிர்பானங்கள், டீ, காபி, பிஸ்கட் போன்றகைளின் விலையும் அதிகமாக உள்ளது. வழக்கமாக பஸ் நிலையங்களில் விலை சற்று அதிகமாக இருக்கும். இங்கு அதையும் தாண்டி விலை மிக அதிகமாக இருப்பதாக பயணிகள் கூறுகிறார்கள். விலைகளை சற்று குறைத்து சாதாரண மக்களுக்கும் கட்டுப்படியான விலையில் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்பது பயணிகளின் ஒருமித்த குரல், கோரிக்கை. அரசு இதை கவனிக்க வேண்டும்.